அஸ்டன் மார்ட்டின் அணியானது நீண்ட கால இடைவெளிக்கு பின் Formula 1 பந்தயத்திற்கு 2021 ஆம் ஆண்டு திரும்பியது. இவ்வணி முதன் முறையாக 1960 காலப்பகுதியில் இப்பந்தயத்தில் கலந்துகொண்டது. பின் 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ரெட் புள் ரேஸிங் அணியின் முதன்மை அனுசரனையாளராகவும் செயற்பட்டு வந்தது. ஆனால் அஸ்டன் மார்ட்டின் அணியானது ஒரு புதுமுக அணியாக 2021 ஆம் ஆண்டு இப் பந்தயத்தில் நுழையவில்லை. மாறாக ஏற்கனவே இப்பந்தயத்தில் போட்டியிட்டுக்கொண்டிருந்த ரேஸிங் பொயிண்ட் எனும் அணியின் உரிமையாளரும் கனேடிய நாட்டு கோடீஸ்வரருமான லோரன்ஸ் ஸ்ரோல், அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தில் 16.7% பங்குகளை அவரின் முதலீட்டாளரிகளின் உதவியுடன் கொள்வனவு செய்ததின் மூலமாக அவரின் ரேஸிங் பொயிண்ட் அணியினை அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் Formula 1 இற்கான உத்தியோக பூர்வ அணியாக மாற்றியமைத்தார். இந்த மாற்றத்தின் முதற்படியாக நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற செபாஸ்டியன் வெட்டல் ஐ தமது அணி சார்பாக பந்தயத்தில் கலந்து கொள்ள இணைத்துகொண்டனர். மற்றய ஓட்டுனருக்கான இடத்தினை லோரன்ஸ் ஸ்ரோல் இன் மகனான லான்ஸ் ஸ்ரோல் பூர்த்திசெய்தார். இது மட்டுமல்லாது அணியின் உத்தியோகபூர்வ நிறமானது இளஞ்சிவப்பில் இருந்து ஐக்கிய இராச்சியத்தை கார் பந்தயங்களில் பிரதி நிதித்துவப்படுத்த பயன்படும் ஒரு தனித்துவமான பச்சை நிறத்திற்க்கு மாற்றப்பட்டது. இப்புதிய பொலிவுடனும் அணியின் வழி நடத்த நட்சத்திர பந்தய ஓட்டுனருடனும் 2021 ஆன் ஆண்டு பலத்த எதிர்பார்ப்புகளுடன் அவர்களின் அவ்வாண்டுக்கான பந்தயக்கார் AMR-21 உடன் களத்தில் இறங்கியது அஸ்டன் மார்ட்டின் அணி.
ஆனால் FIA இனால் அவ்வாண்டிற்க்கு புதிதாக அறிமுகப்படுத்தபட்ட ஒரு சிறிய ஒழுங்கு முறைக்கு ஏற்ப தமது காரினை மாற்றியமைத்த்துக்கொள்ள முடியாமை காரணமாக அஸ்டன் மார்டின் அணி மிகுந்த சாவாலினை எதிர்கொண்டது. F1 பந்தயத்தின் ஒழுங்குமுறைகளை கட்டுப்படுத்தும் அமைப்பான FIA, 2021 ஆம் ஆண்டில், அணிகளின் கார்களினால் உருவாக்கக்கூடிய “டவுன் போர்ஸின்” அளவினை குறைக்க கார்களின் “ப்ளோரில்” ஒரு விலக்கல் பகுதியினை அறிமுகப்படுத்தியது. இதன் மூலமாக அணிகள் இந்த ப்ளோர் பகுதியில் புதிய அனுகுமுறைகளை பரிசோதித்து டவுன்போர்ஸினை அதிகரிப்பதனை கட்டுப்படுதியது. இப் புதிய ஒழுங்குமுறையானது குறைந்த சரிவுக்கோணத்தினை கொண்ட கார்கலான மெர்சய்டிஸ் மற்றும் அஸ்டன் மார்டினை பெரிதும் பாதித்தது.
2021 ஆம் ஆண்டிற்கு அறிமுகப்படுத்த ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த புதிய விதிமுறைகள் கோவிட் காரணமாக 2022 ஆம் ஆண்டிற்கு பிற்போடப்பட்டிருந்த காரணத்தினால் பார்மியூலா 1 அணிகள் FIA உடன் இணைந்து 2020 ஆம் ஆண்டு பந்தயத்திற்கு பயன்படுத்திய அதே கார்களை 2021 ஆம் ஆண்டுக்கும் பயன்படுத்த முடிவெடுத்தனர். இம் முடிவு புதிய விதிமுறைகளுக்கு அணிகளை முழுவதுமாக தயார்படுத்த போதுமான கால அவகாசத்தினை வழங்கும் என்பதனாலேயே எடுக்கப்பட்டது. இந்த விதிமுறை மாற்றத்தினால் அஸ்டன் மார்டின் அதிகளவில் பாதிப்புக்குள்ளானதற்கான காரணம் என்னவெனில், அது ஒரு வோர்க்ஸ் அணியாக இல்லாமல் இருப்பதனாலாகும். அஸ்டன் மார்டின் ஒரு வாடிக்கையாளர் அணி எனும் காரணத்தினால் அவர்கள் காரிற்கு தேவையான சக்தித் தொகுதி மற்றும் ஏனைய முக்கிய பாகங்கலான பல்லிணைப்பெட்டி, பின்புற சஸ்பென்ஷன் போன்றவற்றினை மெர்சய்டிஸ் அணியிடம் இருந்தே கொள்வனவு செய்கின்றனர். இதன் காரணமாக அஸ்டன் மார்டின் என பெயர் மாற்றம் பெற முதல் 2020 காலப்பகுதியில் அது ரேசிங் பொய்ன்ட் ஆக இருந்த சமயம், அவ்வணி 2019 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மெர்சய்டிஸ் அணியின் W10 காரினை பின்னோக்கு பொறியியல் மூலம் மீள் உருவாக்கி அவ்வருட பந்தயத்தில் கலந்துகொண்டனர்.
இது மற்றைய அணிகள் மத்தியில் பலத்த அதிருப்தியை உண்டாக்கியது. இதன் காரணமாக FIA இதில் தலையிட்டு இது போன்ற பின்னோக்கு பொறியியல் மூலம் சக அணிகளின் வடிவமைப்புகளை மீள் உருவாக்கம் செய்வதை தடை செய்ய பல புதிய விதிமுறைகளை அமுல்படுத்தியது. ஆகவே 2020ஆம் ஆண்டுக்குரிய ரேசிங் பொய்ன்டின் கார் வடிவமைப்பு அவர்களினால் சுயமாக உருவாக்கபடாத காரணத்தினாலும் அதே கார் 2021 ஆம் ஆண்டுக்குரிய பந்தயத்தில் அஸ்டன் மார்டின் என பெயர் மாற்றம் பெற்று பயன்படுத்தப்பட்டதனாலும் அவர்களினால் அவ்வருடம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விலக்கல் பகுதி விதிமுறைகளுக்கு ஏற்ப தமது காரின் ஏரோடய்னாமிக்ஸினை புரிந்து கொண்டு மாற்றியமைக்க முடியாமல் திண்டாடினர். ஏனெனில் பார்மியூலா 1 கார்களின் ப்ளோரானது மிகவும் உணர்திறன் மிக்க ஒரு பகுதியாகும். மேற்குறிபிட்டது போன்று புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தமது குறைந்த சரிவுக்கோணத்தினை கொண்ட காரினை மாற்றியமைப்பதில் மேர்சைடிஸ் அணியும் சிக்கல்களை எதிர்கொண்டனர். ஆனால் அவர்களின் காரானது அவர்களின் சொந்த வடிவமைப்பினால் உருவாக்கப்பட்டது எனும் காரணத்தினால் அவர்களினால் சிக்கலினை புரிந்து கொன்டு அதற்கான தீர்வினை உடனடியாக கண்டுபிடிக்க முடிந்தது.
இத்தனை தடைகள் இருந்தும் செபாஸ்டியன் வெட்டெல், அஸ்டன் மார்டின் அணியின் முதல் போடியத்தினை அசர்பைஜானில் நடந்த பந்தயத்தின் போது இரண்டாம் இடத்தினை பிடித்து பெற்றுக்கொடுத்தார். அத்துடன் ஹங்கேரியில் நடந்த பந்ததயத்திலும் இரண்டாம் இடத்தினை பெற்றார். ஆனால் பந்தயத்தின் பின் நடைபெறும் கண்காணிப்பின் போது, காரிலிருந்து போதுமான அளவு எரிபொருள் மாதிரியினை பிரித்தெடுக்க முடியாத காரணத்தினால் அப்போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அஸ்டன் மார்டின் அணி 2021 ஆம் ஆண்டில் 12 தடவைகள் மாத்திரமே புள்ளியினுள் பந்தயத்தினை முடித்து இருந்தனர்.
இவையனைத்தையும் தாண்டி 2022 ஆன் ஆண்டிற்கு அறிமுகமாயிருந்த புதிய விதிமுறைகளுக்கு பலத்த எதிர்பார்புகளோடு தமது AMR-22 காரினை வடிவமைத்து பங்கேற்றது அஸ்டன் மார்டின். ஆனால் கடந்த ஆண்டைப்போலவே 2022ஆம் ஆண்டும் பலத்த பின்னடைவினை அவ்வணி சந்தித்தது. பந்தயத்தில் பங்கேற்ற பெரும்பாலான அணிகள் சந்தித்த ஒரு சவாலினை அஸ்டன் மார்டின் அணியும் சந்தித்தது. “போர்பொய்சிங்” எனும் நிகழ்வே இச்சவாலாகும். இந் நிகழ்வானது கார்கள் அதிவேகத்தில் செல்லும் போது அவற்றின் ஏரோடைனாமிக்ஸ் செயற்படுவது சடுதியாக தடைப்பட்டு மீண்டும் செயற்பட ஆரம்பிப்பதாகும். இந் நிகழ்வு அதிவேகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் காரணத்தினால் காரானது நீரின் மேல் துள்ளிகுதிக்கும் டால்பின் மீனைப்போல மேலும் கீழும் நிலைக்குத்தாக அசைந்தது. இதன் காரணமாக அஸ்டன் மார்டின் அணியானது இது நடைபெறுவதனை தடுக்க காரின் நிலத்திலிருந்தான உயரத்தினை அதிகரித்தனர். இத்துடன் இணைந்து அஸ்டன் மார்டின் அணியின் காரானது மிகவும் குறுகிய செயற்பாட்டு வீச்சினையும் கொண்டிருந்தது. இதன் காரணமாக அவர்களின் காரினை வெவ்வேறு பந்தய பாதைகளின் தேவைகளுக்கு ஏற்றாப்போல் மாற்றியமைத்துக்கொள்ள முடியாமலும் இருந்தது. இத்துடன் சேர்த்து அவர்களின் நட்சத்திர ஓட்டுனர் செபாஸ்டியன் வெட்டெல் கொவிட் பரிசோதனையின் போது தொற்றுக்குள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்தனால் முதல் இரு பந்தய சுற்றுகளான பஹ்ரைன் மற்றும் சவூதியில் பங்கேற்க முடியாமல் போனது.
செபாஸ்டியன் வெட்டல் கோவிட்டிலிருந்து மீன்டு மீண்டும் அணியில் இணைந்த போதும் அணியின் செயல்திறனானது மேம்படவில்லை. ஆனால் அஸ்டன் மார்டின் ஸ்பைனில் நடந்த பந்தயத்தில் பங்கேற்க தமது காரினை கொண்டு வந்தபோது அனைவரது கண்களையும் திரும்பிபார்க்க செய்யும் வகையில் ஒரு விடயத்தினை செய்திருந்தது. ஸ்பைன் பந்தயத்தில் கலந்துகொள்ள அது கொண்டு வந்திருந்த காரானது அவ்வணி அவ்வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திய காரினை விட மிகவும் வித்தியாசமாக இருந்தது. இன்னும் சொன்னால் அஸ்டன் மார்டினின் அந்த புதிய B-ஸ்பெக் காரானது அவ்வருடம் ரெட்புல் அணி பயன்படுத்தும் காரான RB-19 உடன் அதிகளவு ஒற்றுமைகளை கொண்டிருந்தது. அதில் குறிப்பிட்டு சொல்லும் விதமாக ரெட்புல் அணியின் காரில் இருப்பதை போலவே “சைட் போட்”, “ப்லோர்”, “எஞ்ஞின் கவர்”, மற்றும் “டேனிங் வைன்” போன்ற பாகங்கள் அஸ்டன் மார்டின் அணி புதிதாக அறிமுகம் செய்த காரிலும் காணப்பட்டது. இவ்வொற்றுமைகள் காரணமாக அஸ்டன் மார்டின் அணியானது, ரெட்புல் அணியின் வடிவமைப்பு தொடர்பான தகவல்களை முன்னாள் ரெட்புல் அணியில் பணியாற்றி பின் அஸ்டன் மார்டின் அணியில் இணைந்த ஊழியர்கள் மூலம் பெற்றுகொண்டிருக்கலாம் என ஒரு சந்தேகம் உருவாகியது. இச்சந்தேகம் வர ஏதுவாக இருந்த காரணி எதுவெனில், அஸ்டன் மார்டில் அணி இப்புதிய B-ஸ்பெக் காரினை அறிமுகப்படுத்த சில காலத்திற்கு முன்னர், ரெட்புல் அணியின் எரோடைனாமிக்ஸ் பிரிவில் இருந்த சில முக்கிய ஊழியர்களை தமது அணியில் இணைத்துக்கொண்டமையினாலேயாகும்.
ஆனால் அஸ்டன் மார்ட்டின் இந்த குற்றச் சாட்டினை நிராகரித்தததோடு . இப்புதிய வடிவமைப்பானது தாங்கள் சுயமாக கட்டியெழுப்பியதென்றும் , அவ்ர்கள் வருட ஆரம்பத்தில் இப்புதிய வடிவமைப்பினை அவர்களின் பழைய வடிவமைப்பிற்கு சமாந்தரமாக கட்டியெழுப்பிக் கொண்டிருத்தனர் என்றும் கூறினர். அத்தோடு மட்டுமல்லாது ரெட் புள் இனதும் தங்களினதும் வடிவமைப்பானது ஒன்று போலவே காணப்படுவது ஒரு ஒரு தற் செயலலான நிகழ்வெனவும் கருத்துத் தெரிவித்தனர். இக் குழப்பங்களின் காரணமாக FIA ஆனது இதில் தலையிட்டு விசாரணை மேற்க்கொண்டு இப் புதிய வடிவமைப்பானது அஸ்டன் மார்டின் சுயமாக கட்டியெழுப்பியது என்பதற்குரிய போதுமான ஆதாரங்களை கொண்டிருந்ததனால் அவ்வணி எவ் வித விதி முறை மீறல்களுக்கும் உட்படவில்லையென உறுதிப்படுத்தியது. அஸ்டன் மாட்டின் B ஸ்பெக் காரினை அறிமுகப்படுத்திய பின்னரும் அதன் செயற்திறனில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்ப்படவில்லை. ஆனால் இப்புதிய வடிவமைப்பானது அஸ்டன் மார்டின் அணியானது சரியான பாதையிலேயே பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதற்க்கான அறிகுறிகளை காட்டியது. இது இவ்வாறிருக்கும் போது அவர்களின் நட்சத்திர ஓட்டுனரும் நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்றவருமான செபாஸ்டியன் வெட்டல் F1 பந்தயங்களில் இருந்து தான் முற்றாக ஓய்வு பெறுவதாக ஹங்கேரியன் GP இற்கு முன்னதாக அறிவித்தார். இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற நட்சத்திர ஓட்டுனரும் ஸ்பெயின் நாட்டையும் சேர்ந்தவருமான பெர்னாண்டோ அலோன்சோ தேர்ந்த்தெடுக்கப்பட்டார்.
சோதனையோட்டம் முடிந்த கையோடு பஹ்ரெயினில் நடந்த முதலாவது பந்தயத்ததை பெர்னாண்டோ அலோன்சோ ஐந்தாவது இடத்திலும் லான்ஸ் ஸ்ரோல் எட்டாவது இடத்திலும் ஆரம்பித்தனர். பந்தயத்தின் போது பெர்னாண்டோ தனக்கு முன்னால் இருந்த அனைத்து கார்களையும் முறியடித்து அஸ்டன் மாட்டினில் தனது முதலாவது அறிமுகப் பந்தயத்திலேயே மூன்றாம் இடத்தினை அடைந்து போடியம் இடத்தினை பிடித்தார்.
அதில் ஆரம்பித்து தற்சமயம் வரை பெர்னாண்டோ ஆறு போடியம் இடங்களை சுவீகரித்துள்ளார். அதில் 4 மூன்றாம் இட அடைவுகளும் 2 இரண்டாமிட அடைவுகளும் அடங்கும். அது மட்டுமல்லாது மொனாகோ பந்தயத்தின் போது வெற்றிக்கு மித அருகில் வந்தார் பெர்னாண்டோ. ஆனால் அஸ்டன் மாட்டின் அணி எடுத்த ஒரு பிழையான மூலோபாய முடிவு காரணமாக அவ்வெற்றி கை நழுவிச் சென்று பெர்னாண்டோ இரண்டாம் இடத்தை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.
இவ்வருடம் F1 பந்தயத்தில் கலந்து கொண்டுள்ள கார்களில் , ரெட் புள் இற்கு அடுத்த படியாக அஸ்டன் மார்ட்டின் அணி இரண்டாவது மிகச் சிறந்த காரினை கொண்டுள்ளது. தற்போது இவ் அணி வடிவமைப்பாளர்களுக்கான சாம்பியன்சிப் தரவரிசையில் 154 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதில் பெர்னாண்டோ அலோன்சோ 117 புள்ளிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அத்துடன் இவர் ஓட்டுநர்களுக்கான சாம்பியன்சிப் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் காணப்படுகிறார். இவருக்கும் இரண்டாம் இடத்தில் இருக்கும் சேர்ஜியோ பெரேஸ்சுக்கும் இடையில் ஒன்பது புள்ளிகள் வித்தியாசமே மட்டுமே காணப்படுகின்றது. சேர்ஜியோ பெரேஸ் அண்மையில் நடந்த பந்தயங்களில் சிறந்த செயற்றிறனை வெளிப்படுத்த முடியாமல் நெருக்கடியான நிலைமையில் காணப்படுகிறார். இது தொடருமாயின் பெர்னாண்டோ அலோன்சோ தர வரிசையில் சேர்ஜியோ பேரேசை தாண்டி முன்னேறுவதற்கு அதிகளவு வாய்ப்பு காணப்படுகிறது.
அஸ்டன் மாட்டின் இவ்வாறானதொரு அசுர முன்னேற்றத்தினை குறுகிய காலத்தில் அடைத்திருத்தாலும் அது கொண்டுள்ள ஒரு சிக்கலினை நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது. அது என்னவெனில் இது வரை நடந்த பந்தயங்களில் பேர்னாண்டோ அலோன்சோவினால் மட்டுமே காரின் முழுத்திறனையும் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது. அனால் அவரின் சக ஓட்டுனரும் அணி உரிமையாளரின் மகனுமான லான்ஸ் ஸ்ரோலினால் பெர்னாண்டோ அலோன்சோவின் அளவிற்கு திறமையாக செயற்பட முடியவில்லை. பெர்னாண்டோ அலோன்சோ புள்ளிகளுடன் ஒப்பிடும் போது லான்ஸ் ரோல் 34 புள்ளிகளை மட்டும் பெற்று ஓட்டுனர் சாம்பியன்ஷிப் தர வரிசையில் எட்டாம் இடத்தில் காணப்படுகிறார். லான்ஸ் ரோல் ஒரு சிறந்த ஓட்டுனராக அறியப்பட்ட போதும் அவரின் இந்த மோசமான செயற்திறன் காரணமாக அஸ்டின் மார்ட்டின் அணி வடிவைப்பாளர்களுக்கான சாம்பியன்ஷிப் தர வரிசையில் மெர்சய்டிஸ்க்கு அடுத்த படியாக மூன்றாம் இடத்தில காணப்படுகின்றது. மெர்சய்டிஸ் அணியின் காரானது அஸ்டன் மாட்டின் அளவுக்கு வேகமான காரினை கொண்டிராத பொழுதும் அதன் ஓட்டுனர்களான லூயிஸ் ஹமில்டன் மற்றும் ஜோர்ஜ் ரசல் இருவரினதும் சீரான செயற்றிறன் காரணமாக அவர்களினால் அதிக புள்ளிகளை குவிக்க முடியுமாகவிருந்தது. இதன் காரணமாக அஸ்டன் மார்ட்டின் அணியில் லான்ஸ் ஸ்ரோலின் இருப்பானது கேள்விக்குள்ளாகி உள்ளது.
F1 பந்தயத்தில் ஒரு முன்னணி அணியாக தம்மை மாற்றிக்கொள்வதற்கான ஒரு படியாக ஹொண்டா நிறுவனத்துடன் தமது அணிக்கான சக்தி தொகுதிகளை 2026 ஆம் ஆண்டிலிருந்து பெற்றுக்கொள்ள ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது அஸ்டன் மாட்டின் அணி. இவ் ஒப்பந்தத்தி மூலம் 2026 ஆம் ஆண்டிலிருந்து அஸ்டன் மாட்டின் அணியானது ஒரு வர்க்ஸ் அணியாக மாற்றம் பெறும். இது வரை காலமும் இவ் அணி “மெர்சய்டிஸ் AMG HPP” இடமிடமிருந்தே சக்தித் தொகுதிகளை கொள்வனவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக அஸ்டின் மாட்டின் அணி “மெர்சய்டிஸ் AMG HPP” யின் சக்தித் தொகுதிகளின் வடிவமைப்பைச் சுற்றியே தமது காரின் வடிவமைப்பினை மேற்கொள்ள வேண்டி இருந்தது. ஹோண்டாவுடனான இவ் ஒப்பந்தத்தத்தின் மூலம் தமது காரின் வடிவமைப்பினை தாம் விரும்பிய வகையில் மேற்கொள்வதற்கான சுதந்திரம் கிட்டும். இதன் மூலம் அஸ்டன் மார்ட்டின் அணியானது 2026 ஆம் ஆண்டிலிருந்து ஒரு மிகச்சிறந்த முன்னணி அணியாக மாறும் என பலரும் எதிர்பாக்கின்றனர் .